தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர் பொன்முடி விழுப்புரம்: தொழிலாளர் நலத்துறை சார்பில் 3.72 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த புதிய அலுவலகம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சாலாமேடு அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி அருகே நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார்.
இதற்கு எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், நகர மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் தலைவர் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடி புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார். இவ்வாறு இங்கு அமையும் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம், 965.40 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 482.70 சதுர மீட்டர் பரப்பளவு தரைத் தளமும், 482.70 சதுர மீட்டர் முதல் தளமும் அமைய உள்ளது.
அதிலும் தரைத் தளத்தில் காத்திருப்போர் அறை, பணியாளர்கள் அறை, தொழிலாளர் நல அலுவலர் அறை, கோப்புகள் வைப்பு அறைகளும், முதல் தளத்தில் தொழிலாளர் நல அலுவலர் அறை, உதவி ஆட்சி அலுவலர் அறை, கூட்டரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பினை உருவாக்கினார். அதன் பின் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தத் துறையை கண்டுகொள்ளாததால் முடங்கி போய் இருந்தது. பின்னர், முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இந்த துறை சிறப்பாக செயப்பட்டு வருகிறது” என கூறினார்.
மேலும், விழுப்புரத்தில் அமைக்கப்படும் அலுவலகம் மூலம் அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பு, தொழிலாளர்கள் பிரச்னைகள் தீர்க்கும் வகையில் அதிகாரிகள் தீர்வு காண்பார்கள் என தெரிவித்தார். முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டபோது, காலணி அணிந்து கொண்டு பங்கேற்ற சம்பவம் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
கடந்த மே தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெண்ணை ஒருமையில் திட்டியது, பின் இலவச மகளிர் பேருந்து திட்டம் பற்றி ”பெண்கள் எங்க போனாலும் ஓசி பஸ்ல தான போறீங்க” என கூறியது என அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது
இதையும் படிங்க:"மத்திய அரசை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார்" - விழுப்புரத்தில் விளாசிய சி.வி.சண்முகம்!