திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உயர் ரக மதுபான பாட்டில்கள் விற்கப்படும் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையில் காவலர்கள் அந்த டாஸ்மாக் கடையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது கடையில் உள்ள மது பாட்டில்களின் எண்ணிக்கைக்கும், ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடை விற்பனையாளர், மேற்பார்வையாளர், மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் மதுபாட்டில்கள் தவறுதலாக கடைமாற்றி வைக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களை காவல் துறையினர் எச்சரித்தனர்.