சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் திவ்யா (வயது 19). இவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வட ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் மகன் ராஜ்குமார் (வயது 21) என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். மேலும் தங்களது உறவினர் மகனான ஹரி என்பவரைத் திருமணம் செய்து கொள்ளும்படியும் அவர்கள் திவ்யாவைக் கட்டாயப்படுத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, திவ்யா கடந்த 3ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். தொடர்ந்து 4ஆம் தேதி திருக்கோவிலூரில் உள்ள முருகன் ஆலயத்தில் ராஜ்குமாரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.