விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அருண் (33). நகைக்கடைத் தொழிலாளியான இவருக்கு சிவகாமி (27) என்ற மனைவியும் பிரியதர்ஷினி (4), பாரதி (3), சிவஸ்ரீ (1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர்.
அருணுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து தனது வருமானம் முழுவதையும் அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி செலவழித்து வந்துள்ளார்.
இதனால் தொழில் நலிவடைந்து போதிய வருமானம் இல்லாமல் கடந்த சில தினங்களாக வறுமையில் இருந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அருண், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தனது மனைவி, மகள்களுக்கு சயனைடு கலந்த விஷம் கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரிச்சீட்டுகளால் நேர்ந்த சோகம் தற்கொலைக்கு முன் அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மனிதர்களிடம் நியாய தர்மங்கள் இல்லை என்றும் விழுப்புரத்தில் லாட்டரிச்சீட்டுக்களை ஒழிக்கவேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.