விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், 'தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இதனால் எவ்வித தடையுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். தேர்தலைக் கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சுகிறார்.
தமிழ் உள்பட உலகிலுள்ள எந்த மொழியிலும் ஸ்டாலினுக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல். அவர் ஒரு அதிசயத் தலைவர். இந்தத் தேர்தலில் மக்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள்.
விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.