விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம். இங்குள்ள கோயில் தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஏழு லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த தண்ணீர் தொட்டியின் கான்கிரீட் தூண்கள் விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தூண்களில் உள்ளிருக்கும் கம்பிகள் வெளியில் தெரியும்படியாகவும், சில கம்பிகள் துருப்பிடித்தும் மோசமான நிலையில் உள்ளன.
இடிந்துவிழும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டி இந்த தொட்டியானது குடியிருப்புகளின் மிக அருகாமையில் அமைந்துள்ளதால், இடிந்து விழும் பட்சத்தில் அது பேராப்பத்தை விளைவிக்க நேரிடும். எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அலுவலர்களும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அமைக்கப்படும் நீர்தேக்க தொட்டிகளுக்கு ஆண்டுதோறும் பராமரிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு ஒதுக்குகிறது. ஆனால் இன்று வரை அந்த நீர்தேக்க தொட்டிக்கு எந்த விதமான பராமரிப்பும் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பராமரிப்பு என ஒதுக்கப்பட்ட நிதி எங்கே என அப்பகுதி மக்கள் கேள்வியும் எழுப்பிள்ளனர்.