விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தபேட்டை அருகே கணகனந்தல் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் (கடை எண் 11446, 11656) செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்றிரவு பணியை முடித்து மதுபானக் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் செல்லும் வரை கடையை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சிதைத்து, கடை எண் 11446ல் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் மதுபானங்களை திருடியதாகத் தெரிகிறது. அதேபோன்று, பின் பக்கமுள்ள மற்றுமொரு கடையின் சுவற்றில் துளையிட்டு உடைத்து அதிலிருந்த பணத்தையும், மதுபானங்களையும் திருடி சென்றுள்ளனர்.
மேலும், கொள்ளையர்கள், கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமரா, ரெக்கார்டர், மானிட்டர் போன்ற கருவிகளையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. டாஸ்மாக் கடையின் அருகில் இருந்த பெட்டிகடைகளை உடைத்து பணத்தையும் திருடி சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் மதுபானக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையறிந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடை விற்பனை, மேற்பார்வையாளர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் கொள்ளை போன பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருட்டு நடந்த மதுபான கடையை பார்வையிடும் போலீசார் மேலும், நேற்றிரவு கணக்கு முடித்து விட்டு பணத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றதால் பெரிய அளவில் கொள்ளை போகவில்லை எனவும், சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பணம் ஆகியவை கொள்ளை போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.