மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மத்திய அரசு நிதி - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விழுப்புரம் சட்டக்கல்லூரியில் சட்டப்பணிகள் தொடர்பான சிறப்பு முகாமினை, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு 2 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. ராஜா, சட்டப்பணிகள் - ஆணையக்குழு தலைவர் நீதிபதி மகாதேவன், மாவட்ட ஆட்சியர் மோகன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
சட்டக்கல்லூரியில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்ந்து அரங்குகள் அமைக்கப்பட்டதை பார்வையிட்ட பின் மேடையில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சட்டகல்லூரியில் தமிழக அரசு அதிகாரிகள் பல்வேறு துறை சார்ந்து சிறப்பான அரங்குகளை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும், மத்திய அரசு நலத்திட்டம் கொண்டு வருவது கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக செயல்படுவதாகவும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், 'மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மத்திய அரசு நிதி தருவதற்கு தயாராக உள்ளதால், அவ்வாறு தரப்படும் நீதி கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்’ எனக் கூறினார்.
இந்திய அரசு இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று சிறந்து விளங்கவேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இந்தியா உள்ளதால் பல்வேறு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் வளர்ச்சி பெற்றிட வேண்டும் என பிரதமர் மோடி செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் விழுப்புரத்தில் அமைந்துள்ள சட்டக்கல்லூரி அழகான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளதாகவும், சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எதிர்கால நீதிபதிகளாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூகூறினார்.
இதையும் படிங்க: "கதவையும் திறக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை" - அண்ணாமலை விளக்கம்