விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோயில் . இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகளுக்கான சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 2ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம் 2019' நிகழ்ச்சி நடைபெற்றது.
கூத்தாண்டவர் கோயில் திருவிழா கோலாகலம்! இதில் தருமபுரியை சேர்ந்த நபீஸா முதலிடத்தையும், கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாம் இடத்தையும், பவானியை சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பாடகர்கள் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஆகியோர் வெற்றிபெற்ற திருநங்கையர்களுக்கு 'மிஸ் கூவாகம் 2019' பட்டத்தை அளித்தனர்.
இதையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகளுக்கு பூசாரிகள் தாலி கட்டினர். தொடர்ந்து இன்று காலை கூத்தாண்டவரின் திருத்தேர் ஊர்வலமும், அதைத்தொடர்ந்து அரவாண் திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் கோயிலுக்கு வந்திருந்த திருநங்கைகள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலியை அகற்றிவிட்டு, விதவை கோலம் பூண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். இதற்காக இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆண்டுதோறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது, இந்த பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், இந்த ஆண்டு மழையின்றி கடுமையான வறட்சி நிலவியதால் திருவிழாவுக்கு வந்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.