விழுப்புரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரியும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப்போராட்டம் மிகத்தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியின் சொத்துகளை சேதப்படுத்தி பொருட்களை சூறையாடினர். மேலும் இங்கு போராட்டக்காரர்களால் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலால் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயமடைந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி பதிவை வைத்து காவல்துறையினர் மீது கல்வீச்சு நடத்தியது, காவல் துறையினரை செயல்படவிடாமல் தடுத்தது, தனியார் பள்ளிக்கு சேதம் விளைவித்தது, இணையதளங்களில் கலவரங்களை தூண்டும் வகையில் விளம்பரப்படுத்தியது என சுமார் 296 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.