கம்பன் விழாக்கள் அரசு மூலம் நடத்தப்பட வேண்டும் விழுப்புரம்: விழுப்புரத்தில் கம்பன் கழகம் சார்பில் நேற்று மாலை (ஆகஸ்ட் 04) நடைபெற்ற நிகழ்வில், 40ஆம் ஆண்டு கம்பன் விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேடையில் பேசியதாவது:
கம்பன் ராமகாதையைப் பாடினார் என்பதற்காக, தமிழை உரக்கப் பேசியவர்கள் கூட கம்பனை சரியாக பேசவில்லை என்ற ஆதங்கம் நமக்கு உண்டு. கம்பனை யார் மறந்தாலும் தமிழைக் கொண்டாடுபவர்கள் மறக்க மாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில், விழுப்புரம் கம்பன் கழகம் 40-ஆண்டுகளாக கம்பன் விழாவை நடத்தி வருகிறது.
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும், தனிமனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கம்பராமாயணம் மூலம் கம்பர் எடுத்துரைத்துக்கிறார். ராமனைப் பற்றி பாடியதால் என்னவோ தமிழ்-தமிழ் என்று பேசும் பலர், கம்பரை கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள். கம்பனுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். கம்பன் கழகங்கள் எப்படி கம்பனை போற்றுகிறதோ, அதுபோல அரசியல் கழகங்களும் கம்பனைப் போற்ற வேண்டும். அரசு சார்பில் கம்பன் விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
ஆன்மீகம் இந்த மண்ணோடு சம்பந்தப்பட்டது. புதிய கல்வி கொள்கை, ஆரம்ப கல்வியை தாய்மொழியில் படியுங்கள். பின் மற்றொரு மொழியையும் படிக்க வேண்டும் எனறு கூறுகிறது. கம்பன் வடமொழியைக் கற்று தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து உள்ளார். இன்னொரு மொழி கற்பது தமிழுக்கு பெருமை. தமிழை இன்னொரு மொழியால் அழிக்க முடியாது. தமிழ் மொழியால்தான் மற்ற மொழிகள் வளர்கின்றன. மேலும், மற்ற மொழிகளின் சரித்திரங்கள் தமிழுக்கு கிடைப்பதுடன், தமிழ் மொழியின் சிறப்பு, சரித்திரங்களை மற்ற மொழியினரும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இந்த விழாவுக்கு தமிழ்நாடு-புதுச்சேரி எஸ்.கே.ஏ.ஆர்.கே பவுண்டேசன் துணைத் தலைவர் ச.சந்திரசேகரன், புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் வி.எஸ்.கே. வெங்கடாசலபதி, விழுப்புரம் கம்பன் கழகத் தலைவர் கோ.தனபால் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை; ஆன்மீகமும் தமிழும் பிரிக்க முடியாத ஒன்று. ராமனை பற்றி கம்பர் பாடியதால் கம்பராமாயண தமிழை தமிழகத்தில் கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள், கம்பருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும், கம்பன் கழகங்கள் எப்படி தமிழகத்தில் கம்பரை போற்றுகின்றதோ, அதே போல், தமிழகத்தில் உள்ள அரசியல் கழகங்களும் கம்பரை போற்ற வேண்டும். கம்பன் விழாக்கள் அரசாங்கத்தின் மூலம் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:Anbumani Ramadoss: "தேசிய அளவில் மட்டுமே கூட்டணி; தமிழ்நாட்டில் இல்லை" - NDA- கூட்டணி குறித்து மனம் திறந்த அன்புமணி!