உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 330-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும்வகையில், இன்று ஒருநாள் (மார்ச் 22) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமலுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க விழுப்புரம் மாவட்ட மக்கள் ஊரடங்கு அமலுக்கு முழுஅளவில் ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். இதனால் விழுப்புரம் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
குறிப்பாக விழுப்புரம் வழியாகச் செல்லும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி நிலையில் உள்ளது. ஒருசில கனரக வாகனங்கள் மட்டுமே அந்த வழியாகச் சொல்கின்றன.