விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் திருவெண்ணெய் நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட 50 ஊராட்சிகளில், 25 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தாலுகாவிலும், 25 ஊராட்சிகளை திருக்கோவிலூர் தாலுகாவிலும் இனைக்கப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், தாலுகா அந்தஸ்தைப் பெற்ற பிறகு, 2 தாலுகாக்களிலும் உள்ள 50 ஊராட்சிகள் திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் சேர்க்கப்பட்டது. இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 ஊராட்சி கிராமங்களை மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10ஆம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இருந்த போதிலும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர், இருவல்பட்டு பேரங்கியூர், பெரிய செவலை, ஆனத்தூர் உள்ளிட்ட 25 ஊராட்சி கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் வாய்மொழியாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.