விழுப்புரத்தில் நேற்று செய்தியாளரிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், "தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி வரவேற்கத்தக்கது. அரவிந்த் கெஜ்ரிவாலை வெற்றிபெறச் செய்த டெல்லி வாக்காளர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைத்துவிட்டு, இதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது நாங்கள் செய்ய வேண்டியதை செய்து விட்டோம், இனி முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் என திரும்பத்திரும்ப முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் சொல்லியே தங்களது காலத்தை கடத்திவந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையிலும், தமிழ்நாடு அரசின் பொறுப்பற்ற செயலைக் கண்டிக்ககூடிய வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இனியும் தமிழ்நாடு அரசு கால தாமதம் செய்யாமல் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதேபோன்ற தீர்மானத்தைத் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.