விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் அருகே தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.
தடுப்பணை கட்டிய ஒரு மாதத்திற்குள் பெய்த கனமழை காரணமாக தடுப்பணையின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் மண் சுவர் எழுப்பப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (நவ.9) காலை தளவானூரில் தடுப்புபணையின் ஒரு பகுதி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.
பொன்முடி நேரில் ஆய்வு
விழுப்புரம் அருகே உடைந்த தடுப்பணை - அமைச்சர் பொன்முடி ஆய்வு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். உடைப்பை சரி செய்வதற்கான பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த அணையின் மூலம் விழுப்புரம், கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. தண்ணீர் வீணாக வெளியேறாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் உடைப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்டு, உடைப்புக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும் 15 கோடி ரூபாய் செலவில் இந்த அணை மறு சீரமைக்கப்படும்" என்றும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...