விழுப்புரம்: லட்சத் தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடுமெனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜன.07) இரவு முதலே கடலோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோலியனூர், வளவனூர், கானை, அரசூர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், திண்டிவனம் மற்றும் மரக்காணம் என பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கனமழை தொடர்ந்து வருகிறது.
மேலும், இந்த கன மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.07) இரவு முதல் இன்று (ஜன.08) காலை வரை மட்டும் 148.90 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாகக் கடலோரப் பகுதியான மரக்காணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 133 மில்லி மீட்டர் மழையும், அதற்கு அடுத்தபடியாக வானூரில் 120 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நேற்று (ஜன.07) இரவு முதல் செய்துவரும் கனமழையின் காரணமாக மரக்காணம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ள சிறுவாடி கிராமத்தில் மழை நீர் தேங்கி நின்றுள்ளது.
மேலும், அங்கு உள்ள கடைகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன், வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் மழை நீரின் அளவு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மழையின் போதும் கிராமத்தில் இதே நிலைமை இருப்பதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் தற்போது பல்வேறு சேதங்களுக்கு ஆளாகியுள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் அப்டிங்க:பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 1000 அடியாக அதிகரிப்பு!