விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளியான கலிவு மற்றும் மணி தம்பதியினர், இவர்களுக்கு செல்வம், ஐயப்பன், முருகன், சாந்தி ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடித்து தொழில் காரணமாக வெளி ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியாக வசித்து வரும் கலிவு மற்றும் மணி தம்பதியினர் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் இருந்தனர். அப்போது மூன்றாவது மகன் முருகனின்,மகன் அருள் சக்தி என்பவர் தனியாக இருந்த கலிவு மற்றும் மணிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குளிர்பானத்தை அருந்திய மூத்த தம்பதியினர் உயிரிழந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து முதியவர் கலிவின் பேரன் அருள் சக்தி நேற்றிரவு தலைமறைவாகியுள்ளார். காலை நீண்ட நேரம் ஆகியும் மூத்த தம்பதியினர் வெளியே வராததால் சந்தேகமுற்ற அக்கம்பக்கத்தினர், சந்தேகத்தின் பேரில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது மூத்த தம்பதியினர் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
இதனை அடுத்து விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு பில்லூர் கிராமத்தினர் தகவல் கொடுத்ததின் பெயரில் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முதியவரின் பேரன் அருள் சக்தி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியில் வேலை எதுவும் இல்லாமல் சுற்றித்திரிந்து வரும் நபர் எனவும்; இவர் நேற்று இரவு முதியவரின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தான் கேட்ட பணத்தை தராமல் இருந்ததும் இதனால் ஏற்பட்ட அதிக ஆத்திரத்தினால் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து மூத்த தம்பதியினருக்கு அளித்துள்ளார். இதன் காரணத்தாலேயே மூத்த தம்பதியினர் இருவரும் இறந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தலைமறைவாக உள்ள பேரன் அருள் சக்தியை தேட தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மூத்த தம்பதியினரை பேரனே குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.