விழுப்புரம்:திண்டிவனம் மற்றும் மாவட்டத்தின் அனைத்துக்கிராம மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1509 கோடி மதிப்பீட்டில் மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்டத்தினை ஆளும் திமுக அரசு கைவிட்டுள்ளதால், இதனைக் கண்டிக்கும் விதமாக மாநிலங்களவை உறுப்பினரும் மாஜி அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமையில் நேற்று(ஆக.27) திண்டிவனம் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் கூறியதாவது, “விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் வானம் பார்த்த பூமி. விவசாயத்துக்குப் பயன்படுத்தக்கூடிய நீருக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு உடைய மாவட்டமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் இருந்து வருகின்றன.
இப்படி மாவட்டத்தின் நீர் தேவையின் பல ஆண்டுகாலப் போராட்டத்திற்கும், கோரிக்கைக்கும் பிறகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை முதல்முறையாக கிராமப் பகுதிகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், ரூ.1502 கோடி மதிப்பில் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தில் கடலில் இருந்து ஒரு நாளைக்கு 60 எம்எல்டி குடி, தண்ணீரை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக திட்டத்தை உருவாக்கி அறிவித்தார்.
முதல்கட்டமாக திண்டிவனம், விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 669 பேரூராட்சிகளில், மருத்துவமனைகளுக்கும் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இன்று பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்த திட்டங்களை நிறைவேற்றியதை தவறிய பட்சத்திலும் பொதுமக்களின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் முடக்கி செயல்படுத்த மறுக்கின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான துறை சார்ந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை வற்புறுத்தி அந்த திட்டத்தை செயல்படுத்த ஏன் வழிவகை செய்யவில்லை? அதிமுகவின் நலனுக்காக இத்திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை. ஏழை எளிய பொதுமக்களின் நலன் கருதியே திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த திட்டங்களை விடியா அரசு முடக்குவது ஏன்?
கல்வி, தொழிற்சாலை அனைத்திலும் பின் தங்கிய மாவட்டம்; குடிநீருக்கும் தட்டுப்பாடு உடைய மாவட்டம் விழுப்புரம். இத்தகைய மாவட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று முனைப்பில் கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்த அரசு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
குறிப்பாக மாவட்டம் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் கல்வியை வழங்க வேண்டும். அந்த வகையில் தான் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் விழுப்புரத்தில் அதிமுக அரசு பல்கலைக்கழகம் ஒன்றை கொண்டு வந்தது. ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு விழுப்புரத்தைச் சேர்ந்தவரை உயர் கல்வித்துறை அமைச்சராக்கி அவரை அழகுபடுத்தி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு எதிராக, அந்த பல்கலைக்கழகங்களை மாற்றியுள்ளனர்.
செம்மண் கொள்ளை:பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் இன்று செம்மண் கொள்ளை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இப்போதுதான் தெரிகிறது ஏன்? அந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள் என்று, தினந்தோறும் 500-க்கும் அதிகமான வாகனங்களில் செம்மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. செம்மண் கொள்ளை அடிப்பவர் யார் என்று இந்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
அரசுப் பல்கலைக்கழகம் இருந்திருந்தால், விழுப்புரத்தில் அரசுப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கும், இங்கே இருக்கக்கூடிய மாணவர்களுக்கும் இலவசமாக பயில வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் மயிலத்தில் தற்போது திமுக எம்பியின் தனியார் பல்கலைக்கழகத்தில் கட்டட வேலை நடைபெறுகிறது. இதன் காரணமாகவே, விழுப்புரத்தில் அரசு பல்கலைக்கழகத்தை இழுத்து மூடினார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் என்ன குறை கண்டீர்கள். இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு, சேலம் வேப்பூரில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். சொல்வதற்கு நன்றாக இருக்கும் சட்டச்சிக்கல்கள் இருக்கக்கூடிய காவிரி நதியின் மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்போவதாக காதில் பூசுற்ற பார்க்கிறார். அவர்களுடைய நோக்கம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே.
இரண்டு மாவட்டங்களை சேர்த்து திட்டம் உருவாக்கப்பட்டால் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. அதே மேட்டூரில் இருந்து கொண்டுவரப்பட்டால் 5000 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் விழுப்புரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு 80கோடி ரூபாய் செலவாகிறது. மேட்டூரில் உருவாக்கப்படும் திட்டத்திற்கு வெறும் 32 கோடி ரூபாய் மட்டுமே செலவாகிறது எனக் காரணம் கூறுகிறார்கள்.