விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் இடைநிலைப் பள்ளி மாணவர்கள், ஐந்து பேர் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தேசிய ஆதிவாசி ஒற்றுமைச் சபை என்ற தனியார் அமைப்பு நிர்வாகிகள், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீயிடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று வட்டாட்சியர் வேல்முருகன் தலைமையில் வருவாய்த்துறையினரும், கொத்தடிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த அலுவலர்களும், உளுந்தூர்பேட்டை அடுத்து மேட்டத்தூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதிகளில் உள்ள வயல்களில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் வேடங்குப்பம், விழுப்புரம் மாவட்டம் எடப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, வறுமையின் காரணமாக இடைநின்ற ஏழைப் பள்ளி மாணவர்கள் என்பதும், அவர்கள் கொத்தடிமைகளாகச் சென்று செங்கம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த துரை ஆகியோரிடம் ஆடு மேய்க்கும் பணிக்காகச் சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஐந்து பேரும் ஏற்கனவே கொத்தடிமைகளாக ஆடுமேய்த்தபோது, இவர்கள் மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக வறுமையைப் போக்க மீண்டும், பணத்தைப் பெற்றுப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பணிக்காக வந்தது தெரியவந்தது. அத்துடன் தொடர்ந்து கல்வியைப் பயிலச் சிறுவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.