விழுப்புரம்:கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது 2021 பிப்ரவரி 21ஆம் தேதி புதுக்கோட்டைச் சுற்றுப் பயணத்தின்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்பட்டது.
மேலும் இதுகுறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்பியை செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தடுத்து நிறுத்தி சமரசம் பேசியதாகத் தெரிகிறது. இதனால் பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் புகாரைக் கொடுப்பதைத் தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (பிப்.10) நடைபெற்ற விசாரணையின்போது முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்பியும் ஆஜராகவில்லை. மேலும் இதற்கான காரணத்தை அவர்களது வழக்குறிஞா்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.