மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் விழுப்புரம்:முண்டியம்பாக்கம், செம்மேடு ராஜ்ஸ்ரீ ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பேரவை கூட்டம், விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நேற்று (டிச.12) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கரும்பு விவசாய சங்கத்தின் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில், கரும்பு விவசாய சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கரும்பு வெட்டு கூலி முழுவதும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும், கரும்பு கிரையத் தொகையை கரும்பு வெட்டி முடித்த 15 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், ஆலைகள் கரும்பு பிழிதிறன் பார்க்காமல் அரசு அறிவிக்கும் விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு வட்டியின்றி உரக்கடன் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு இன்சூரன்ஸ் தொகையை விரைவில் பெற்றுத் தர வேண்டும். இந்த ஆண்டு கரும்பு பருவத்துக்கு ஏக்கருக்கு 2 மூட்டைகள் டிஏபி உரம் வட்டியில்லாமல் வழங்க வேண்டும், கரும்பு பயிருக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து கரும்பு விவசாய சங்கத்தின் தலைவர் பாண்டியன் பேசியதாவது, “மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மாநில அரசு டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்க வேண்டும். மத்திய அரசு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 150 அறிவித்துள்ளது. பிழைத்திறன் அடிப்படையில், ரூ. 2 ஆயிரத்து 919 கிடைக்கிறது. இந்தியா முழுவதும் ஒரே பிழைத்திறன் அடிப்படையில் விலை நிர்ணயிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற நஷ்டத்தை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். கரும்பிற்கான செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.87 ஆயிரம் ஆகின்றது. தமிழக அரசிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.90 ஆயிரம் மட்டும் பெறுவதன் காரணமாக, கரும்பு விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். கரும்பு விவசாயம் இது போன்று சென்று கொண்டிருந்தால், வருங்காலங்களில் கரும்பு பயிர் செய்வது குறைந்துவிடும்.
தற்போது, கரும்புக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சாப்பில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரத்து 100 வழங்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 850 வழங்கப்படுகிறது. வட மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு மிகவும் சரிந்து காணப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம், மத்திய அரசுடன் மாநில அரசு முறையான அணுகுமுறை இல்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க:“ஆருத்ரா முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” - இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் ஆர்.கே.சுரேஷ்!