விழுப்புரம்: மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வீடூர் அணை மயிலம்,வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களால் 1959-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் வீடூர் அணை திறந்து வைக்கப்பட்டது. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட 13-வது அணைக்கட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும் நீரினால் தமிழ்நாடு, புதுச்சேரிப் பகுதியில் உள்ள 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. புதுச்சேரி, வானுார், மயிலம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பாசன நிலங்களின் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது.வீடூர் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32 அடியாகும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீர் 28 அடிக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.