விழுப்புரம்:கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012இல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஜூலை மாதம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.