விழுப்புரம்: வானூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் "2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பொதுக் குழுக் கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "ஒரு கட்சி என்பது நாடாளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏக்களை கொண்டது அல்ல, மக்களுக்கு அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பது தான் முக்கியம். பாமக மட்டும் இல்லை என்றால் தமிழகத்திற்குச் சமச்சீர்க் கல்வி வந்து இருக்காது, லாட்டரி ஒழிந்து இருக்காது, இந்தியாவிற்கே நாம் வழிகாட்டி, 108 ஆம்புலன்ஸ் நாம் கொண்டு வந்தது, ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்கிறோம் என்று தெரிவித்தார்.
அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தமிழக கட்சிகளில் எந்த கட்சிகளில் அதிகளவில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என ஆய்வு நடத்தியதாகவும், அதில் பா.ம.க.வில் தான் அதிகளவில் இளைஞர்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
காலையில் நிறுவனர் அறிக்கை விட்டால் மாலையில் தீர்வு காணப்படுகிறது. அய்யா கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். திமுக கூட்டணியில் பா.ம.க. சேர்ந்து விடுமோ என கேட்கிறார்கள், நமது இலக்கு தமிழக வளர்ச்சி தான் என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் வேளாண் மண்டலம் அமைக்கக் கோரினோம். ஆனால் அங்கிகாரம் கிடைக்கவில்லை. டெல்டா மக்களே நம்ம கூட்டணிக்கு ஓட்டுப் போடவில்லை. இப்ப புரிந்து வருகிறார்கள் என்றார். தற்போது நமக்கு ஏத்த அரசியல் சூழல் இருக்கிறது. தமிழகத்தில் கட்சிகள் உடைந்து கிடக்கிறது. சில கட்சிகள் விளம்பரம் செய்கிறார்கள். ஒரு தலைவர் தினமும் மீடியா பார்கிறார். வாட்ச் காட்டுகிறார். நமக்கு அது வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்வோம். அங்கீகாரம் வருகிறது. நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வழியில்லை. இரு கட்சிகளையும் 50 ஆண்டு காலம் மக்கள் பார்த்து வெறுத்து விட்டனர்.