மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய க. பொன்முடி, " மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் கார்ப்ரேட்டுக்கு துணைபோவதாக அமைந்துள்ளது.
தன்னை விவசாயி என சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு எதிராக துரோகங்களை இழைத்து வருகிறார். விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். மத்திய அரசு ஜனநாயக முறையில் நடக்காமல் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளது.
மத்திய அரசின் கிசான் திட்டத்தில் உண்மையான விவசாயிகள் யாரும் இல்லை. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்பாவிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இம்முறைகேட்டில் ஆளுங்கட்சியின் பங்கு அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்தது திமுக ஆட்சியில்தான்" என்று தெரிவித்தார்.