விழுப்புரம்:தீபாவளியை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு நாளை முதல் வருகிற 12ஆம் தேதி வரை கூடுதலாக 2,087 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விழுப்புரம் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ராஜமோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “தீபாவளி 2023 பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் அதிக அளவில் புழக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வருகிற நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரையிலான நாட்களில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக நவம்பர் 9 அன்று 247 சிறப்பு பேருந்துகள், 10ஆம் தேதி 675 சிறப்பு பேருந்துகள், 11ஆம் தேதி 862 சிறப்பு பேருந்துகள் மற்றும் நவம்பர் 12ஆம் தேதி 303 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், ஓசூர், வேலூர், ஆரணி, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரிக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் சிதம்பரம், தருமபுரி, ஓசூர், நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களுக்குச் செல்ல https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல், மேற்படி விடுமுறையை முடித்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 528 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. வருகிற ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வருகிற 13ஆம் தேதி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தீபாவளியை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில்!