தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 5, 2023, 3:09 PM IST

ETV Bharat / state

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கைகளால் வடைகளை எடுத்து வழிபாடு

விழுப்புரம் அருகே கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து வெறும் கைகளால் வடைகளை எடுத்தும், மிளகாய்ப்பொடி தண்ணீரில் அபிஷேகம் செய்து கொண்டும் பக்தர்கள் விநோதமான நேர்த்திக்கடன் செலுத்திக்கொண்டனர்.

devotees took the vada from pan of boiling oil with their bare hands near villupuram
விழுப்புரம் அருகே கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கைகளால் வடைகளை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கைகளால் வடைகளை எடுத்து வழிபாடு

விழுப்புரம்:தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பங்குனி உத்திரத்தையொட்டி தங்கள் குலதெய்வ கோயில்களில் விநோதமான முறைகளில் நேர்த்திக்கடன் செலுத்துவது பரவலாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூர் அருகே அய்யலூரில் ஒரு கோயிலில் பக்தர்கள் சேத்தாண்டி வேடமிட்டு செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிவாங்கி விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம், பில்லூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல 39-ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு காவடி அபிஷேகமும், 8 மணியளவில் காவடி ஊர்வலமும், மதியம் 12.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் பக்தர்கள் சிலர், தங்களது தாடைகளில் அலகுகளை குத்திக்கொண்டும், கொதிக்கும் எண்ணெயில் வடைபோட்டு சிறிது நேரத்தில் அந்த வடைகளை எண்ணெய் சட்டியில் இருந்து வெறும் கையாலேயே எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைப் பார்க்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மிகுந்த நெகிழ்ச்சியடைந்து ''அரோகரா அரோகரா'' என முருகனை வழிபட்டனர்.

மேலும் கொதிக்கும் எண்ணெயிலிருந்து வெறும் கைகளாலேயே எடுக்கப்பட்ட இந்த வடைகளை, பக்தர்கள் ரூ.50 முதல் ரூ. 100 வரை கொடுத்து வாங்கிச்சென்றனர். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மேற்கண்ட இந்த வடையைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு விரைவில் உண்டாகும் என்பது இக்கோயிலில் நீண்ட கால ஐதீகம். எனவே, வடையை வாங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

அதேபோன்று விரதம் இருந்த பக்தர் ஒருவருக்கு மிளகாய்பொடி கலக்கப்பட்ட நீரில் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணியளவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு இடும்பன் பூஜையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும், நாடக குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதேபோல் விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழாவையொட்டி நேற்று முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள், பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

அதேபோன்று விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சியும், நேற்று மாலை தீமிதி திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி பயபக்தியுடன் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதையும் படிங்க: வேடசந்தூர் அருகே விநோதம்! செருப்பு, துடைப்பத்தால் அடிவாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

ABOUT THE AUTHOR

...view details