தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாழ்வானபகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் : தாழ்வான கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மையங்களில் சென்று தங்குமாறு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.

sea
sea

By

Published : Nov 24, 2020, 2:54 PM IST

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, விழுப்புரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இன்று (நவ.24) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அழகன்குப்பம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையத்தின் நேரில் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கிருந்த மீனவ கிராமப் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாதுரை, "விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் கரையைக் கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை

இதனால் மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவ கிராமங்களில் உள்ள படகுகளும் மீன் வலைகளும் மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல், மழை சமயத்தில் தாழ்வான குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு 12 அதிநவீன பாதுகாப்பு பல்நோக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளை கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

பின்னர் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், "விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பேரிடரை சமாளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற 60 காவலர்கள் நான்கு குழுக்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம் பகுதிகளில் இவர்கள் பணி செய்வார்கள். அதுமட்டுமின்றி அனைத்து உள்கோட்டத்திலும் இரண்டு காவல் அணிகள் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி ஒவ்வொரு கிராமத்திலும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இடர்பாடுகள் நேராத வண்ணம் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details