விழுப்புரம்:கடந்த ஜனவரி மாதம் 2021ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணியில் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கிருந்த சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார்.
தமிழ்நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஐபிஎஸ் அலுவலரின் பாலியல் குற்றச்சாட்டு
வழக்காக பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு காவல் துறை மூலம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையானது சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.