விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறியதாவது, ”டிடிவி தினகரனுக்கு அம்மாவைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. டிடிவி தினகரன் லண்டனில் வாங்கி இருந்த சொகுசு ஹோட்டல் முறைகேடால் மட்டுமே அம்மா மீது போடப்பட்ட போலியான சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
ஆனால் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சொகுசு ஓட்டல் முறைகேடு வழக்கினை மட்டும் திறமையாக நீக்கம் செய்ததால் அம்மா சிறைவாசம் சென்றார். தகவல் கேள்விப்பட்டவுடன் கோபமடைந்த அம்மா(ஜெயலலிதா) டிடிவி தினகரனை இனி பாோயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைய கூடாது என அடித்து விரட்டினார்.
நாங்கள் ஆளுநரை சந்தித்ததற்கு திமுகவினர் பல காரணங்களை கூறுகின்றனர். தற்போது நடைபெறும் விடியா அரசின் சட்ட ஒழுங்கு சீரழிவு, ஊழல், மக்கள் படும் துயரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி நாங்கள் ஆளுநரிடம் சுட்டிக்காட்ட சென்றோம். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலையும் அதிமுக ஒரு போதும் அனுமதிக்காது. அது நாங்கள் கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் தற்போது நடைபெறும் திமுக கொண்டுவரும் சட்டமாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அதற்கு நாங்கள் முழுவதுமாக ஆதரிப்போம்.