சர்வே செய்வதால் மட்டும் அணை கட்டிவிட முடியாது - அமைச்சர் துரைமுருகன் வேலூர்: 'மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு ஏனோ தானோ என்று இருந்து விடாது, இதற்காக உச்ச நீதிமன்றமும் செல்வோம்' என வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கே.வி.குப்பம் மற்றும் லத்தேரி ஆகியப் பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கே.வி. குப்பத்தில் புதிதாக மகளிர் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் கொண்டுவந்த திட்டங்களால் இன்று கல்வித்துறையில் அதிகம் பேர் படித்து வருகின்றதாக கூறிய அவர், தற்போது தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது எனக் கூறினார். மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வி வரை பயின்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், வெளிநாடுகளில் அதிகம் பேர் சைக்கிள் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் சைக்கிள் ஓட்டுவதால் மனநிலை ஒருநிலைப்படுகிறது எனவும் அவர் கூறினார். எனவே மாணவர்கள் மனநிலை ஒருநிலைப்படவும் உடலும் உள்ளமும் வலிமை பெறவும்; சைக்கிளை பயன்டுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதையும் படிங்க: இந்திய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழ்நாடு தேர்வு!
பின்னர் மேகதாது அணை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ''கர்நாடகா அரசு மேக தாது அணையின் குறுக்கே அணை கட்டுவதற்கான சர்வே பணிகள் செய்வதாலேயே மேக தாது அணையை கட்ட முடியாது. மேகதாதுவில் எந்த ஒரு அணையைக் கட்டினாலும் பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும்.
மேலும் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். இதையெல்லாம் தாண்டி உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பல்வேறு கட்டப் பணிகள் உள்ளன.
இவற்றையெல்லாம் தாண்டி மேகதாதுவில் அணையைக் கட்ட முடியாது. கர்நாடகாவில் புதிதாக அவர்கள் ஆட்சிக்கு வந்ததால் வேகத்துடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் அணையைக் கட்ட முடியாது. ஆனாலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏனோ தானோ என்று இருந்துவிடாது. இதற்காக உச்ச நீதிமன்றமும் செல்வோம்” என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் வருகிற 11ஆம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் இது குறித்து அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள் எனக் கூறினார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள மேல் அரசம்பட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் - முன்னாள் திமுக அமைச்சர் மீதான வழக்கு ரத்து!