திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கோவிந்த் பகவான் (32). கடந்தாண்டு பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது, மாணவ, மாணவிகள் ஆசிரியர் பகவானை அங்கிருந்து செல்லக்கூடாது என்று தடுத்து, கட்டிப்பிடித்து அழுதனர். இக்காட்சி சமூகவலைத் தளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து பகவான் அனைவரது கவனத்தையும் பெற்றார். அதைத் தொடர்ந்து, அவருக்கான பணியிட மாறுதல் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர் பகவான் வசிக்கும் பொம்மராஜுபேட்டையில் உள்ள அவரது மாமா முறை உறவினர் நாதமுனியின் மகள் கவிதா என்ற பெண், தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பகவான் தன்னை ஏமாற்றி விட்டு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளதாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருத்தார்.