தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களின் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு.. ஜேசிபிக்கு அடியில் அமர்ந்து பெண் போராட்டம்! - vellore news

வேலூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் ஜேசிபி இயந்திரத்திற்கு அடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு.. ஜேசிபி அடியில் அமர்ந்து பெண் போராட்டம்
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு.. ஜேசிபி அடியில் அமர்ந்து பெண் போராட்டம்

By

Published : Jun 9, 2023, 1:59 PM IST

வேலூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது

வேலூர்: காட்பாடி வட்டம் பொன்னை கிராமத்தின் அருகே குறவன் குடிசை என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. மறைந்த காமராஜர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, இந்த நிலத்தில் குறவன் பழங்குடியின மக்களின் 20 குடும்பங்களுக்கு வீடு கட்டி தரப்பட்டு உள்ளது.

இந்த வீடுகளில்தான் பழங்குடியின மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் பிச்சாண்டி என்பவரின் மனைவி ஈஸ்வரி வசித்து வருகிறார். இவர், அவரது வீட்டிற்கு அருகில் தனது மகளுக்காக ஒரு சிறிய வீட்டை கட்டி உள்ளார்.

இந்த நிலையில், ஈஸ்வரி கட்டி உள்ள இந்த வீடு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி வருவாய்த் துறையினர் அதனை நேற்று (ஜூன் 8) இடிக்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது, இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அது மட்டுமல்லாது, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக கொண்டு வந்த ஜேசிபி இயந்திரம் முன்னால் அமர்ந்து அப்பெண் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும், அந்த வீடு கட்டிய ஈஸ்வரி திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் தீக்குளிக்கவும் முயற்சி செய்து உள்ளார்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், அங்கு இருந்து அவரை அப்புறப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்தான் வசித்து வருவதாகவும், பல இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ள நிலையில், ஒரு வீட்டை மட்டும் இடிப்பதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்று உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

இதன் மூலம் கோயில் உள்பட பல்வேறு அரசு உடமைகளுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா அரசு? - லூப் சாலை ஆக்கிரமிப்பின் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details