வேலூர் : வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று(நவ 14) பிற்பகல் 2 மணியிலிருந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இந்நிலையில், வேலூர் காகிதப்பட்டறை டான்சி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய மலைப்பகுதியில் உள்ள சுமார் நூறு டன் எடை கொண்ட மிகப் பெரிய பாறை ஒன்று மழையின் காரணமாக உருண்டு அம்மலைப்பகுதியின் கீழே இருந்த வீட்டின் மீது விழுந்தது.
பாறை சரிந்து வீட்டில் விழுந்ததில் பெண் உயிரிழப்பு!
வேலூரில் பாறை சரிந்து விழுந்ததில் ஒரு பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிக்கிக்கொண்ட மற்றொருரை விரைந்து மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ரமணி(45), நிஷாந்தி(24) ஆகிய இருவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ரமணி என்ற பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது நிசாந்தியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் மீட்பு பணியை பார்வையிட்டு வருகின்றனர்.
வீட்டின் மீது பாரிய விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து இரண்டு குழுக்களை கொண்ட 30 தேசிய மீட்பு படையினர் 3 மோப்ப நாயுடன் வேலூர் விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஏற்காடு மலைப்பாதையில் உருண்டுவிழுந்த ராட்சதப் பாறை அகற்றம்