வேலூர்:வேலூர் மாவட்டம், வள்ளிமலை அருகே பொண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 35 கோடியில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (அக்.18) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பொண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 35 கோடியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். காட்பாடி புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.
காவிரி - குண்டாறு இணைப்பு தொடர்பாக மாயனூரில் மிகப்பெரிய தடுப்பணையைக் கட்டியிருக்கிறோம். அந்த தடுப்பணையில் இருந்துதான் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கிருந்து இரண்டு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு அரசாங்கத்தினுடைய பணம் இல்லாமல், வெளியில் கடன் வாங்கிதான் அந்தப் பணிகளை செய்து வருகிறோம். மூன்றாவது கால்வாய் வெட்டுவதற்கு அடுத்த மாதம் டெண்டர் விடப்படும்” என கூறினார்.