இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய தாக்கத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. தினமும் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று நாட்டையே புரட்டி எடுத்த தொற்றினை ஒருவழியாக கரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ முறைகளை கொண்டு சுகாதாரத் துறையினர் கட்டுப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து டெல்டா பிளஸ் எனும் புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இருப்பினும் அது இந்தியாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்போது உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான், இந்தியாவில் எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்த சில கேள்விகளை ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பாக பிரபல வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:
ஒமைக்ரான் பரவலை எதிர்கொள்ள நம் நாடு தயாராக உள்ளதா?
ஆம், தயாராக உள்ளது. 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கரோனா தொற்றின் இரண்டு அலைகளை எதிர்கொண்டுள்ளதால், அனைத்து மாநில அரசுகளும் தொற்றின் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து நன்கு அறிந்துள்ளன. மேலும் அனைத்து மாநில அரசுகளும் மூன்றாவது அலையை எதிர்பார்த்துள்ளன.
எந்த மாதத்தில் ஒமைக்ரான் பரவல் உச்ச நிலையை அடையும்?
ஒமைக்ரான் வைரஸ் நவம்பர் 2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்குள் வந்து, தற்போது வரை தொடர்கிறது. இது வேகமாகப் பரவும் வைரஸ் என்பதால் அடுத்த ஆண்டின் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் உச்ச நிலையை அடையக்கூடும். இதற்கு முன்பு இருந்த தொற்று வகைக்கு தனிமைப்படுத்தப்படும் காலமானது 7 நாட்களாக இருந்தன. ஆனால், ஒமிக்ரானுக்கு அக்காலம் 14 நாட்களாகும்.
இதனை எதிர்கொள்ள இந்தியாவில் போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளதா?
லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, வீட்டு தனிமைப்படுத்தல் போதுமானது மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்க தேவையில்லை. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நோய் தொற்று சிறிய அளவில் உயரக்கூடும். அந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவமனைகளில் குழந்தைகளை அனுமதிப்பது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட வேண்டும்.
ஒமைக்ரான் வைரஸ் ரத்தத்தில் கலக்கும்போது அதன் அளவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். மேலும் தனிமைப்படுத்தல் மற்றும் மறு பரிசோதனைக்கு 14 நாட்கள் தேவையில்லை.
மீண்டும் ஒரு அலை ஏற்பட்டால் ஊரடங்கு விதிக்க வேண்டுமா?
தொற்றில் சிறிய உயர்வு இருக்கக்கூடுமே தவிர புதிய அலை என்பது மிகவும் சாத்தியமில்லாத ஒன்று. தற்போதுதான் ஒமைக்ரான் தொற்று இந்தியாவிற்குள் வந்துள்ளது. மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கக்கூடிய சூழலில், குழந்தைகளிடையே ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக காணப்படலாம். இந்தியாவில் எங்கும் ஊரடங்கு என்பது இனி தேவையில்லை.
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு ஒமைக்ரானால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்ன?
இது இன்னும் உறுதியாக தெரியவில்லை. தடுப்பூசி போடப்படாத நபர்கள் வூஹான் அல்லது டெல்டா வகை தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே தடுப்பூசி போடாத அனைவரும் சமமானவர்கள் அல்ல. வயது மூப்பு, கர்ப்பம், நாள்பட்ட நோய்கள், புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுபவர்களுக்கு நோயின் தாக்கம் கடுமையாக இருக்கக்கூடும். குறைந்தபட்சம் கடுமையான நோய் தொற்றை எதிர்பார்த்து சிக்கலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது டோஸும், இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, போன்ற திட்டங்கள் கண்டிப்பாக நம்மிடையே இருக்க வேண்டும்.
ஒமைக்ரான் வகை அதிகமாக உருமாறக்கூடியவை என ஆய்வு கூறுகிறது. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படக்கூடும்?
அதிகமாக உருமாறக்கூடியதால் இவை மிகவும் எளிதாகப் பரவக்கூடும். மேலும் நடுத்தர அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை எளிதாக பாதிக்கக்கூடும். கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை பெற்றவர்களிடமும் இது போன்ற பாதிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. பல உருமாற்றங்கள் ஒமைக்ரானை குறைந்த வீரியம் கொண்டதாக ஆக்கிவிட்டன என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இந்த கரோனா நோய் தொற்று எப்போது முடிவுக்கு வரும்?
டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 ஆம் ஆண்டுவரை வெவ்வேறு மாதங்களில் பல்வேறு நாடுகளில் தொற்று தொடங்கியது. தொற்று நோய்கள் ஒரே மாதிரியான நிலையிலேயே முடிவுக்கு வரும். ஏற்கனவே இந்தியா, தைவான் மற்றும் ஜப்பான் ஆகியவை தொற்றுநோய்(Pandemic) கட்டத்தின் முடிவை எட்டியுள்ளன. தற்போது "எண்டமிக்"(Endemic) நிலையை அடைந்து, குறைந்த மற்றும் நிலையான எண்ணிக்கையில் தொற்றின் நிலை உள்ளது. இஸ்ரேல் நாட்டிலும் தொற்று இதே நிலையை எட்டுவதாக தெரிகிறது.
இந்த நான்கு நாடுகளிலும் தொற்று நோயுடைய முடிவின் தொடக்கம் காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் தொற்றுநோய் முடிந்துவிடும் என நான் யூகிக்கிறேன்.
இருப்பினும் கரோனா வைரஸ் எண்டமிக்காக நம்மிடையே தொற்றாகவும், நோயாகவும் தொடரும். அதாவது காய்ச்சல், ஜலதோஷம் போன்று நம்மிடையே இருக்கும். தடுப்பூசியின் தேவையும் தொடரும்” என்றார்.
இதையும் படிங்க:மணிகண்டன் விஷம் அருந்திய காரணத்தால் உயிரிழந்தார் - ஏடிஜிபி தாமரைக்கண்ணன்