நெல்மணியில் தமிழ்மொழி எழுதிய மழலைகள்.. வேலூரி விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம்.. வேலூர்: நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், இந்த நாளில் நெல் அல்லது பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல் அல்லது பச்சரிசியில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுக்கும் இந்த விழா 'வித்யாரம்பம்' என்று அழைக்கப்படுகிறது. இதனையொட்டி, கல்வி ஆரம்ப நாளான விஜயதசமியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை, பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்து பள்ளியில் சேர்ந்தனர்.
அப்படியாக இன்று (அக்.24) பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்களை தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு, நெல்மணியில் நமது தாய்மொழியான தமிழ்மொழியின் முதல் எழுத்தான 'அ' -வை எழுத வைத்து கல்வி கற்கத் தொடக்கி வைத்தனர்.
இதில் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தனியார்ப் பள்ளி ஒன்றில் தங்களின் குழந்தைகளுக்குக் கல்வியை ஆரம்பித்து வைக்கும் விதமாக நாவில் அச்சாரம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளை அவர்களது தாயின் மடியில் அமரச் செய்து குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு தாம்பூலத்தில் பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே போன்று புத்தகத்தைக் குழந்தையின் கையில் கொடுத்து அ,ஆ,இ என அகரத்தை வாசிக்க வைத்து வாசிக்க கற்றுக் கொடுக்க தொடக்கி வைத்தனர். இந்த நிகழ்வுக்கு வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விஜயதசமி பண்டிகையில் ஒன்றான வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குலசை தசரா திருவிழா; காளி வேடம் அணிந்து பரவசமாக ஆடிய பக்தர்கள்!