வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் பணியின்போது நல்லறத்துடன் நடந்துகொள்ளவும், அவர்களின் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும்.
அதற்கு ஒவ்வொரு நாள் காலை 7.00 மணிக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வான்செய்தி (VHF) மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உலகப்பொதுமறையான திருக்குறளில் இருந்து "தினம் ஒரு குறள்" வாசிக்கவும் அதன் விளக்கத்தை எடுத்துக் கூறவும் வேலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு வான்செய்தி மூலம் பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதன்படி இன்றுமுதல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருக்குகுறள் வாசிக்கப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இன்றைய அதிகாரம்: நீத்தார் பெருமையில் இருந்து
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து,
வேண்டும் பணுவல் துணிவு" என்ற குறள் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் வி. கவுஸ் பாஷாவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய செயல்கள் மூலம் காவலர்களின் மன அழுத்தம் குறைக்கப்படும். பொதுமக்களோடு இணக்கமான நிலையில் காவலர்கள் பணியாற்ற முடியும் எனக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.