கோடிகளைக் குவிக்கும் மண்பாண்ட தொழில்.. நடைமுறை சிக்கல்களால் நலிவடையும் அவலம்..! வேலூர்: தமிழரின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பொங்கல் பண்டிகையின் போது மக்கள் அரிசி, வெல்லம், நெய் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கும், கால்நடைகளுக்குப் படைத்து, உற்றார் உறவினர்களுடன் கொண்டாடி வருகின்றனர். தற்போது தைப்பொங்கல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொங்கல் பானை தயாரிக்கும் தொழில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதே போல், வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஒடுக்கத்தூர், அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், பொங்கல் பானை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பல வண்ணங்களில் இருக்கும் பானைகளைப் பொதுமக்கள் அதிகம் விரும்புவதால், அதற்கு ஏற்றார் போல் பானைகளில் வண்ணங்களைத் தீட்டி, மண்பாண்ட தொழிலாளர்கள் பானைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக 7 வகையான மண்பானைகள், பருப்பு செட்டி, அடுப்பு போன்ற பல்வேறு மண்பாண்ட பொருட்கள் பல்வேறு வடிவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மண் பானையை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மண் அடுப்பு, மண் சட்டி போன்ற மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதால் மண்பாண்ட பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், “தீபாவளி பண்டிகையின் போது நோன்பு பானைகள், கார்த்திகை தீப திருவிழாவின் போது அகல் விளக்குகள், பொங்கல் பண்டிகையின் போது மண்பானைகள், பருப்பு செட்டிகள், மண் அடுப்புகள் போன்ற மண்பாண்ட பொருட்கள், ஆண்டில் மூன்று தடவை மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகள் செய்வோம்.
அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தை வைத்து மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மக்களின் ஆதரவு போதுமான அளவு இல்லை. இதனால் தமிழ்நாட்டில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு நடைபெற்று மண்பாண்ட தொழில், தற்போது நலிவடைந்து வருகிறது. வேலூரில் 500 மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மண்பாண்டங்கள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி பள்ளிகளைத் தமிழக அரசு அமைத்துத் தர வேண்டும். மேலும் அரசு கடன் உதவி செய்து தர வேண்டும்” என்று தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன் மீது அக்கறை கொண்டு, மண் பாண்டங்களை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து, நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை மற்றும் அடுப்பு போன்றவற்றை இணைத்து வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கையாகத் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:வேலூரில் அகில இந்திய அளவில் நடந்த கராத்தே போட்டி.. 2000 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு..