வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மார்த்தாண்ட குப்பம் பகுதியில் பசுபதி என்பவருக்குச் சொந்தமாக இயங்கிவரும் அரிசி ஆலையில் பலர் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இன்று வேலூர் மாவட்ட துணை ஆட்சியர் மெகராஜ் தலைமையிலான அலுவலர்கள் பசுபதியின் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (22), இவரது மனைவி சோனியா (21), குழந்தைகள் சாரதி (4) சத்யா (1), சோனியாவின் தாய் குமாரி (40), சோனியாவின் சகோதரர் நகராஜ் (20), ஆந்திர மாநிலம் கே.பி.ஆர். புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (26), அவரது மனைவி சுதா (24), குழந்தைகள் துர்கா (7), குமார் (5), ராஜேந்திரனின் இரண்டாவது மனைவி சுகுணா (20), அவரது குழந்தை சந்தோஷ்குமார் (3), சுரேஷ் (33), அவரது மனைவி சாந்தி (20), குழந்தை பானு பிரசாத் (1) ஆகிய 15 பேரும் பசுபதியிடம் வாங்கிய கடனுக்காக பல ஆண்டுகளாக இங்கு கொத்தடிமைகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 15 பேர் மீட்பு அதேபோல், அவர்கள் அனைவருக்கும் மிகவும் குறைவான ஊதியம் கொடுத்து கொத்தடிமைகளாக பசுபதி வேலை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, துணை ஆட்சியர் மெகராஜ் அதிரடியாக பசுபதியிடம் இருந்து ஆறு குழந்தைகள் உள்பட 15 தொழிலாளர்களை மீட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர்களுக்கு அங்கு மறுவாழ்வுக்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது.