வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11ஆம் தேதி முதல் நடைபெற்று இன்றுடன் நிறைவுபெறுகிறது. நேற்று மாலை வரை மொத்தம் 33 பேர் வேலூர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் வித்தியாசமான முறையில் கழுத்தில் கொய்யாப் பழ மாலை அணிந்தபடி வேட்புமனு தாக்கல் செய்யவந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை வலியுறுத்தியே கொய்யாப் பழ மாலை அணிந்து வந்ததாகக் கூறினார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது மாடியிலுள்ள தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரத்தை சந்தித்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
செல்லப்பாண்டியனின் அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகள் மேலும், தான் வெற்றிபெற்றால் டாஸ்மாக் கடைகளில் தரமான மது கிடைக்கச் செய்வேனென்றும், ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறார்.