வேலூர்: குடியாத்தம் நகரின் மைய பகுதியில் செல்லும் கௌவுண்டன்யா ஆற்றை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று (ஆகஸ்ட் 3) ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர், "குடியாத்தம் நகர் பகுதிக்குள் செல்லும் கௌவுண்டண்யா ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளுக்கு மாற்று குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். முதலாவதாக 800 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்டும்.
மேலும், நகர பகுதிக்குள் ஆற்றங்கரையில் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் விதமாக ஆற்று எல்லைப் பகுதிகளில் 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்புச் சுவர் கட்டப்படும். ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியாத்தம் நகராட்சிப் பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு வெளியாகும் 7 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. கரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தவும், எதிர்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:காட்பாடியில் முகமூடி கொள்ளை - ஆசிரியர் வீட்டில் கைவரிசை!