வேலூர்:மாநில அளவிலான கைத்தறி ரக வடிவமைப்புப் போட்டிக்கு, இளம் கைத்தறி வடிவமைப்பாளர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வடிவமைப்பு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இளம் தலைமுறையினர் இடையே கைத்தறி ரகத்தின் மீதான பிணைப்பை ஏற்படுத்திடவும், மாறிவரும் நவீன சந்தையின் தேவையை அறிந்து புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும், கைத்தறி ரகங்களில் புதுமையைப் புகுத்தி விற்பனையை அதிகரிக்கவும், மாநில அளவில் இளம் கைத்தறி வடிமைப்பாளர்களிடம் இருந்து சிறந்த வடிவமைப்புகள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.
இதையொட்டி, தமிழகத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், ஜவுளி தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், வடிவமைப்பாளர்களுக்கு இடையே போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டித்தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.