வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்,
வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 7,01351 பேரும், பெண்கள் 7,31,099 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேரும் உள்ளனர்.
தேர்தல் பணியில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் உள்ள 1,553 வாக்குச்சாவடிகளில் 179 பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நுண்பார்வையாளர்கள் 215 பேர் கண்காணிப்புப் பணியில் இருப்பார்கள். தேர்தலுக்காக அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்தது. வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் அலுவலர் பேட்டி வேட்புமனுவை நேற்று மூன்று பேர் திரும்பப் பெற்றனர். இறுதியாகக் களத்தில் 28 பேர் உள்ளனர். தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கும் பணி முடிந்தது. மேலும், 2,099 விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். மொத்தம் 75 பறக்கும்படை சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 25 ஆயிரத்து 790 ரூபாய் பணம், 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 22 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மூன்று வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.