வேலூர்: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.
இந்த விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான (Cyber crime) கணினி மூலம் ஏற்படும் குற்றங்கள் பற்றியும் சமூக வலைதளங்களில் ஏற்படும் பாலியல் வன்புணர்வுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து மாணவிகளாகிய நீங்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கான வயது, பக்குவம் குறைவாக இருக்கும். எனவே, தேவையில்லாத விஷயங்களில் தங்கள் மனதிள் ஆசைகளை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
மாணவிகள் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். பயணிக்கும்போது பல்வேறு இடையூறுகள் வரும், அப்போது கவனத்தை சிதறவிடாமல் உங்கள் குறிக்கோளை மட்டுமே மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வில் தற்காலிகமாக ஆசைகள் பல பிறக்கும். அதை புறந்தள்ளி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.