வேலூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பச்சிளம் ஆண் குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து குழந்தையை கடத்திச்சென்ற தம்பதியை போலீஸார் 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் கைது செய்ததோடு குழந்தையை மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா(மாற்றுத்திறனாளி). இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண்கள் ஒருவர் மட்டுமே வார்டில் உடனிருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா(30) என்பவர் வந்துள்ளார்.
சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவளித்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுவிட்டார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து வேலூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
4 தனிப்படைகள் அமைத்த போலிஸ்:இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னககுமார் தலைமையில் வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து தனிப்படை போலீஸார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பத்மா, குழந்தையை கடத்திக்கொண்டு வேகவேகமாக மருத்துவமனையில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.