தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் விமான நிலைய விரிவாக்கம் பணியின் சிக்கல் தீர்ந்தது - Vellore airport extension

வேலூர்: விமான நிலைய விரிவாக்க பணிக்கு தேவைப்பட்ட மாநில நெடுஞ்சாலையை, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதால் நீண்ட நாட்களாக நீடித்த சிக்கல் தீர்ந்துள்ளது.

vellore airport
vellore airport

By

Published : Feb 7, 2020, 9:42 PM IST

வேலூர் அருகே அப்துல்லாபுரம் பகுதியில் 1930ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிய விமான நிலையம் இயங்கி வந்தது. இங்கே பத்துக்கும் குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லும் மிகச் சிறிய ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டுவந்தன. பின்னர் நாளடைவில் இந்த விமான நிலையம் செயல்படாமல் முடங்கியது.

இந்நிலையில் மத்திய அரசு கடந்த ஆண்டு உடான் திட்டத்தின்கீழ் வேலூர் விமான நிலையத்தை புதுப்பித்து விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே விமான நிலையம் வசமுள்ள 52 ஏக்கர் நிலத்துடன் கூடுதலாக 68 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. மொத்தம் 120 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

அதன்படி விமான நிலையத்தில் 800 மீட்டர் கொண்ட ஓடுதளம், பயணிகள் முனையம் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் பயணிகள் முனையத்திற்கும் ஓடு தளத்துக்கும் இடையே அப்துல்லாபுரம் - ஆலங்காயம் செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இது முக்கிய போக்குவரத்து சாலை என்பதால் இந்த சாலையை துண்டித்து ஓடு தளத்தையும் பயணிகள் முனையத்தையும் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அப்துல்லாபுரம் - ஆலங்காயம் நெடுஞ்சாலை

எனவே இந்த சாலையை ஒப்படைக்கும்படி விமான நிலைய ஆணையம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது. ஆனால் இதுதொடர்பாக முடிவு எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்துவந்த நிலையில், இந்த சாலையை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து முதன்மைச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், மத்திய விமான நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வேலூர் விமான நிலையம் விரிவாக்கம் பணிக்கு தேவைப்படும் அப்துல்லாபுரம் - ஆலங்காயம் மாநில நெடுஞ்சாலை எண் 122ஐ விமானநிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலாக விமான நிலைய சுற்றுப்பகுதியின் அருகிலேயே ரூ. 1.7 கோடியில் மாற்று சாலை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் விமான நிலையம் விரிவாக்கம் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள்

இதையடுத்து இன்று வேலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அப்துல்லாபுரம் விமான நிலையம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பயணிகள் முனையத்திற்கு பின்புறம் யூ வடிவில் மாற்று சாலை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இன்னும் ஓரிரு வாரங்களில் மாற்று சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வேலூர் விமான நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவுற்று விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்றும் சுமார் 300 பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய ரக விமானங்கள் வேலூர் வழியாக சென்னை முதல் பெங்களூரு வரை இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெயிலுக்கு பெயர் போன வேலூரில் பெரிய அளவில் சுற்றுலாத்தலங்களோ தொழில் மையங்களோ இல்லை எனவே விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வேலூர் நகரம் வளர்ச்சியடையும் என மாவட்ட பொது மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதையும் படிங்க: கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியன் நடத்தும் 'தர்பார்'

ABOUT THE AUTHOR

...view details