வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை அம்பானி, அதானி நிறுவனங்கள் வாங்கி இந்த பூமிக்கு அடியில் உள்ள மீத்தேன் ஹைட்ரோ கார்பன் வாயுக்களை எடுத்து பல கோடிகள் சம்பாதிக்கத்திட்டமிட்டுள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கின்றன.
தமிழகத்தில் ஓடுகின்ற நதிகளின் எண்ணிக்கையும், அதில் கட்டப்பட்டுள்ள அணைகளின் எண்ணிக்கையும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் சொல்லச் சொன்னால் எனது ஆருயிர் சகோதர் துரைமுருகன் போல் சொல்வதற்கு இனி ஒருவர் தமிழகத்தில் பிறந்துதான் வரவேண்டும். இப்படிப்பட்ட செழுமையான தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது அதை தட்டிக்கேட்க தைரியமும்,திராணியும்இல்லாமல் அதிமுக அரசு எடுபிடி சேவகம் செய்து வருகிறது. இந்த அரசை நாம் தூக்கி எரிய வேண்டும்.
வேலூர் பிரசார கூட்டத்தில் பேசும் வைகோ மேலும், 18சட்டப்பேரவைத்தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவேன் என்று ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார், அதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆற்றலும், திறமையும் கொண்டவர் எனவே அவரை லட்சக்கணக்கான வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார்.