வேலூர்:அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூரை அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று (பிப்.15) நடைபெற்றது. இந்த விழாவுக்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். மேலும் துணை தாசில்தார் ராமலிங்கம், ஒடுக்கத்தூர் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனையடுத்து வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் உலகநாதன், நாட்டாண்மை தசரதன், விழா குழுவினர்களான பாபு, கனகாச்சாரி, விஜயகுமார் உள்பட பலரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் காளை விடும் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. இங்கு 250 காளைகள் கொண்டு வரப்பட்டன.
அந்த காளைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்த பிறகு வாடிவாசலில் இருந்து, ஒவ்வொரு காளைகளாக விடப்பட்டன. அப்போது இளைஞர்கள் தெருவின் இருபக்கங்களிலும் நின்று காளைகளை உற்சாகப்படுத்தினர். இந்த காளை விடும் விழாவில் பங்கேற்று, மாடுகள் முட்டியதில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.