அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் எதிரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நீண்ட போராட்டத்திற்கு பிறகு நமக்கு பரிசு பெட்டிச் சின்னம் கிடைத்துள்ளது. இது ஒரு சரித்திர சாதனை ஆகும். இந்திய வரலாற்றிலேயே சுயேச்சையாக போட்டியிடும் ஒரு கட்சிக்கு 40 தொகுதிக்கும் ஒரே சின்னம் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை.
எப்படி ஆர் கே நகரில் அம்மாவின் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட என்னை வரலாற்று சாதனையாக வெற்றி பெற செய்தீர்களோ அதேபோல் உங்கள் பிள்ளையான டிடிவியின் வேட்பாளர்களை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும். இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைந்துள்ளன. தேசிய கட்சிகளால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது காவிரி பிரச்னையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்னையாக இருந்தாலும் சரி, பாலாறு பிரச்னையாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு தான் வருகிறது, காரணம் அவர்களுக்கு இங்கே செல்வாக்கு இல்லை, அதனால் இங்கே எம்.எல்.ஏ எம்.பி ஆக முடியுமா என்று பார்க்கிறார்கள்.